வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்! அசத்தும் அம்மா நகரும் நியாயவிலைக் கடை!

 

வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்! அசத்தும் அம்மா நகரும் நியாயவிலைக் கடை!

இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் ரூ.9.66 கோடியில் 3,501 இந்த ’அம்மா நகரும் நியாயவிலைக் கடை’களின் சேவையினை இன்று (21.09.2020) துவக்கி வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மக்களின் அலைச்சலையும், நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும், வீட்டு வாசலிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதால், குறிப்பாக கொரோனா போன்ற பேரிடர்களைச் சமாளிக்க இத்திட்டம் ஏதுவாக அமையும் என்பதாலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

வீட்டுக்கே வரும் ரேசன் பொருட்கள்! அசத்தும் அம்மா நகரும் நியாயவிலைக் கடை!

ஒவ்வொரு வார்டிலும், தெருக்களிலும் மக்கள் ஒன்றிணையக்கூடிய பொதுவான இடங்களில் இந்த ரேஷன் பொருட்கள் வீட்டிற்கு அருகிலேயே சென்று விநியோகிக்கப்பட உள்ளது. அனைத்து நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்படும் நாள், எந்த இடத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரிடமிருந்து அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநியோகத்திற்கான இடமாக, அரசாங்க கட்டிடம், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டிடங்கள் அல்லது பொதுமக்கள் கூடிவருவதற்கான பொது இடமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 400 கடைகள் திறக்கப்பட உள்ளன என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுதெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகம் முழுவதும் 5,36,437 ரேஷன் அட்டைதாரர்கள், இத்திட்டத்தால் பயன் அடைவார்கள்.

திருச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 43 மொபைல் ரேஷன் கடைகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. தற்போது இத்திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் நெரிசலில் அவதிப்படுவது தவிர்க்கப்பவதாலும், மலைக்கிராமங்களிலும், தொலைதூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் முறை குறைந்து, மக்களுக்கு எளிதான சேவை கிடைக்கும் என்பதாலும் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது