குழந்தை கடத்தலுக்கு தமிழகம் ஹாட் ஸ்பாட்டா ?

 

குழந்தை கடத்தலுக்கு தமிழகம் ஹாட் ஸ்பாட்டா ?

சென்னையில், கடந்த 6 ஆம் தேதி கடத்தப்பட்ட குழந்தை, அடுத்த 10 நாட்களில் மீட்கப்பட்டு  பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களாக நீடித்த பதட்டமும், பரபரப்பும் சற்றே முடிவுக்கு வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்லு. சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே  குடிசை பகுதியில் தங்கி,  கட்டுமான பணிகளில் வேலைகளை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதியன்று அறிமுகமான  அசாம் மாநில இளைஞர் சுனிலை, வேலை வாங்கித் தருவதாக இரக்கப்பட்டு  வீட்டுக்கு அழைத்துச் சென்று உணவு அளித்து தங்க வைத்துள்ளார்.  ஆனால் சுனிலோ, அடுத்த நாள் காலை பப்லுவின் 3 வயது பெண் குழந்தை மர்ஜினாவை  கடைக்கு அழைத்து செல்வதாக கூறி  கடத்தி சென்று விட்டார்.

குழந்தை கடத்தலுக்கு தமிழகம் ஹாட் ஸ்பாட்டா ?

சுனில் விட்டுச் சென்ற கைப் பை, அதில் இருந்த ஒரு செல்போன் எண்,  அப்பகுதி சிசிடிவி கேமரா என எல்லா வகையிலும் துப்பறிந்த போலீசார், செங்கல்பட்டு அடுத்த நாவலூரில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.   குழந்தையை கடத்திய  சுனில் தப்பி ஓடியுள்ளார். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். குழந்தை கடத்தலில் தமிழகம் ஹாட் ஸ்பாட்டாக மாறி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
 

குழந்தை கடத்தலுக்கு தமிழகம் ஹாட் ஸ்பாட்டா ?


இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்,  மகாராஷ்டிராவை சேர்ந்த ஜானிபோஸ்லே,  ரத்திஷா போஸ்லே  தம்பதிகளின் 7 மாத ஆண் குழந்தை சென்னை மெரினாவில் இருந்து கடத்தப்பட்டது.  பலூன் வியாபாரம் செய்து வரும் அவர்களிடம்,  குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி இளம்பெண் ஒருவர் கடத்திச் சென்றார்.  அப்போது 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு பெண்ணிடம் இருந்து அந்த  குழந்தை மீட்கப்பட்டது.
 
அதுபோல, பிப்ரவரி மாதத்தில்,  வால்டாக்ஸ் சாலையில் வசிக்கும் பெருமாள்-லட்சுமி தம்பதிகள் 6 மாதக் கைக்குழந்தை நள்ளிரவில் கடத்தப்பட்டது.   சட்டக் கல்லூரி அருகே சாலை ஓரத்தில் வசித்த விமல்-  நேத்தா தம்பதிகளில்  3 வயது ஆண் குழந்தை ரோகேஷ் காணாமல் போனது.

பிப்ரவரி மாதத்திலேயே பெசன்ட் நகர் கடற்கரையில்  வசித்த சினேகா என்கிற பெண்ணிடம் இருந்து அவரது குழந்தை நள்ளிரவில்   திருடப்பட்டது. இப்படி தினசரி குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கும் 44 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் குறிப்பிடுகிறது.

இது போன்ற குழந்தை திருட்டு சம்பவங்களில், குழந்தை இல்லாத தம்பதிகள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் அதையும் தாண்டி பெரிய கும்பல் செயல்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அவர் மூலம் பல குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்டது அப்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு தத்து எடுக்கும் உரிமை இல்லை என்பதால், குழந்தை ஆசையில் சிலர் கடத்துகின்றனர். ஆனால், அதைத் தவிர்த்து தொழில்முறையில் குழந்தைக் கடத்தல் என்பது உலக அளவில் மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க் கொண்டுள்ளது.

பெண் குழந்தைகளை கடத்திச் சென்று, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறார்கள். அங்கு பாலியல் தொழிலுக்கும், ஆபாச படங்களை எடுக்கவும் கடத்தப்படும் பெண் குழந்தைகள் பயன்படுத்துகிறார்கள். சமீப ஆண்டுகளில் உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

கடத்தப்படும் குழந்தைகளின் உடல் உறுப்புகளை சிதைத்து குழந்தை தொழிலாளர்களாகவும், நகரங்களில் பிச்சை எடுக்கவும் ஒரு கும்பல் செயல்படுகிறது. சிறுவயதிலேயே கடத்தப்படும் குழந்தைகள், பின்னாட்களில் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அடையாளம் காண முடியாமலும், தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத சூழ்நிலையிலும் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைக் கடத்தல் சம்பவங்களின் போது காவல்துறை துரிதமாகச் செயல்பட்டால் மட்டுமே குழந்தைகள் மீட்கப்படுகின்றன. அப்படி மீட்கப்பட்ட எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கடத்தல் கும்பலைப் பிடித்த போலீசார் தீவிரமாக முயன்றாலும், அந்த நெட்வொர்க்கை இதுவரை தடுக்க முடியவில்லை. காவல்துறையா ? கடத்தல் நெட்வொர்க்கா ?இந்த ஓட்டம் நடந்தாலும் குழந்தைக் கடத்தல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

-தமிழ்தீபன்