ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் தீ விபத்து: அரசின் இலவச வேட்டி,சேலைகள் எரிந்து நாசம்

 

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் தீ விபத்து: அரசின் இலவச வேட்டி,சேலைகள் எரிந்து நாசம்

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

ஈரோடு வீரப்பன் சத்திரம் காவேரி ரோட்டில் நாராயணன்(56) என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் மூலம் செயல்பட்டு வருகிறது. இங்கு 17 விசைத்தறி மூலம் காடா துணி, அரசின் இலவச வேட்டி, சேலை போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் தீ விபத்து: அரசின் இலவச வேட்டி,சேலைகள் எரிந்து நாசம்

இந்நிலையில், மாலையில் 2 தொழிலாளர்கள் தறி ஓட்டிக்கொண்டிருந்தனர். சுமார் 6.30 மணியளவில் விசைத்தறி கூடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்த விசைத்தறி கூட தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். ஆனால், தீ கட்டுக்குள் வராமல், அங்கு உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த காடா துணி, இலவச வேட்டி, சேலைகள், நூல் பண்டல்களில் மளமளவென பரவி எரிய துவங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றியும், நுரைத்தல் கலவையையும் தெளித்து சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து மின் கசிவால் நடந்திருப்பதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து ஈரோடு வடக்கு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.