12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை தொடக்கம்!

 

12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை தொடக்கம்!

வழக்கமாக பொதுத் தேர்வு முடிந்து ஓரிரு நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி விடும். ஆனால் இந்த முறை கடந்த மார்ச் 24 ஆம் தேதியே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், விடைத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை தொடக்கம்!

நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களின் 48 லட்சம் விடைத்தாள்கள், 200 மையங்களில் திருத்தும் பணி தொடங்க உள்ளது. ஆனால் கொரோனா அதிகமாக இருக்கும் சென்னையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடத்த முடியாததால், அந்த விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன் படி, விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இப்பணியில் ஆசிரியர்கள் கட்டாயமாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.