திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…

 

திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…

திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த கட்சிக்குள் நிலவும் உள்கட்சி குழப்பங்களுக்கு விடை கிடைக்குமா என்கிற கேள்வியை முன்வைத்து அரசியல் நோக்கர்கள் கவனித்து வருகின்றனர்.

கட்சியின் பொருளாளராக டிஆர் பாலுவும், பொதுச் செயலாளராக துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை அதற்கு முழு அங்கீகாரம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…

இந்த சந்தர்ப்பத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வரிசையிலும் மாற்றங்கள் நடக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் வயது முதிர்வு காரணமாக தீவிர கட்சிப் பணிகளை குறைத்துக் கொள்வதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும், அதை தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மகளிர் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பூங்கோதை ஆலடி அருணா நியமனம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

காற்றில் விடப்படும் சமூக நீதி

இதற்கிடையே, சமூக நீதி பேசும் திமுகவில், பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்கிற குரல்கள் கட்சியில், இருந்தும், கட்சிக்கு அப்பாற்பட்டும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கி எல்லா சந்தர்ப்பத்திலும், எல்லா இடங்களிலும் திராவிட கருத்துகளை பேசி வரும் ஆ. ராசா போன்றவர்களுக்கு உயர் பொறுப்புகளில் இடமளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…
ஆ.ராசா

தமிழக அரசியல் களத்தில் ஆ.ராசா போன்றவர்கள் தீவிர பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என்றும், டெல்லி அரசியல் மட்டுமே செய்ய இடமளிக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. இது திமுக தலைமை திட்டமிட்டே செய்து வருகிறது என்கிற குரல்கள் நீண்ட காலமாகவே ஒலித்து வருகின்றன.

இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துதான் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அந்த கட்சியிலிருந்து வெளியேறினார். இதற்கு முன்னர் கட்சியின் சென்னை தளபதிகளில் ஒருவரான பரிதி இளம்வழுதி இதே குற்றச்சாட்டை முன்வைத்து கருணாநிதி காலத்திலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பாராமுக போக்கு நீடிப்பது திமுகவில், பட்டியலின பிரிவினர் வளர முடியாது என்கிற எண்ணத்தை உருவாக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில், துணைப் பொதுச் செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

பொன்முடி போர்கொடியா ?

இந்த நிலையில் புதிய குழப்பமாக, கட்சியின் மூத்த தலைவரான பொன்முடி போர்க்கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என். நேருவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தனக்கு அளிக்கப்படவில்லை என வருத்தத்தில் உள்ளாராம். கட்சியின் முதன்மை செயலாளராக கே.என்.நேரு அமர்த்தப்பட்டதுபோல, தனக்கும் வெயிட்டான பதவி வேண்டும் என கட்சித் தலைமையிடம் நெருக்கடி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து துணைப் பொதுச் செயலாளர் வரிசையில், பொன்முடிக்கு இடம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பதவி மீது அவருக்கு விருப்பமில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞரணி தனி ஆவர்த்தனம்

மூத்த தலைவர்கள் மத்தியில், இப்படியான குழப்பம்  நீடித்து வரும் நிலையில், இளைஞரணி தரப்பில் இருந்தும் குடைச்சல் உருவாகியுள்ளதாம். குறிப்பாக, இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மூத்த தலைவர்களை பொருட்டாகவே கருதுவதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் உதயநிதி முரண்பட்டதாகவும் சில தகவல்கள் கசிந்தன.

திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…

அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு வியூகங்களை வகுக்க, சபரீசன் ஆலோசனைப்படி பிரஷாந்த் கிஷோரின் நிறுவனம் திமுகவுக்கு கடந்த ஓராண்டாகவே வேலை செய்து வருகிறது. இதற்கே கட்சியின் அணிகள் செம கடுப்பில் உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனி ஆவர்த்தனம் தொடங்கி உள்ளாராம். இதற்காக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தலைமையில் புதிதாக ஒரு டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கட்சிக்குள் தலைமைக்கும், இளைஞரணிக்கும் தனித் தனி ஆலோசனை குழு இருந்தால், யார் சொல்வதை கேட்பது ? யாருக்கு வேலை செய்வது ? என்கிற குழப்பம் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கட்சியினரே பேசும் நிலைமை உள்ளது.

ஐடி பிரிவு உரசல்கள்

இதற்கிடையே திமுக ஐடி பிரிவு தலைவராக உள்ள பிடிஆர் தியாகராஜனுக்கும், தயாநிதி மாறனுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஐடி பிரிவு செயல்பாடுகள் சரியில்லை என ஸ்டாலினிடம் தயாநிதி சொன்னதாகவும், அதற்கு  தியாகராஜன் செம கடுப்பில் இருப்பதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக பொதுக்குழுவும் – உள்கட்சி குழப்பங்களும்…

இப்படியான குழப்பங்களை எல்லாம் தாண்டி, மதுரையிலிருந்து அழகிரி கொடுக்க உள்ள குடைச்சலும் திமுகவுக்கு பெரிய சவாலாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 

வரும் தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்க வேண்டும் என மிகப்பெரிய திட்டங்களை தீட்டி வரும் திமுக, உட்கட்சி கும்மாங்குத்துகளில் கவனம் செலுத்தினால் மட்டுமே கரை சேர முடியும் என்கின்ற அரசியல் வட்டாரங்கள்.

-நீரை மகேந்திரன்