மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அழைப்பு!

 

மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அழைப்பு!

திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசினுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பாக செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளிப்பது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தினை மத்திய அரசினுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தென்னகத்தினை புறக்கணித்துள்ளதாக தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் டி. ராஜேந்தர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் இதுகுறித்து வெளியிட்ட வீடியோ பதிவில், ‘’மத்திய அரசினுடைய பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பாக மீண்டும் திரையரங்குகளை திறப்பது குறித்து ஒரு கலந்தாலோசனை கூட்டத்தினை வருகின்ற செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று நடத்தவிருக்கிறார்கள். அதற்காக திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட அதிபர்கள் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவில் இருப்பவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களை புறக்கணித்து விட்டார்கள். எங்கள் தென்னகத்திலே ஆண்டுக்கு 800 படங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால், அழைப்பு இல்லை. அதுவே, குறைவான எண்ணிக்கையில் படங்களை வெளியிடும் குஜராத்தில் இரண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள். இதைப்பற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்னை நினைக்கிறது என்றே தெரியவில்லை? தென்னகத்தை புறக்கணிப்பது என்பது கண்டனத்திற்குரியது, வருத்தத்துக்குரியது. எங்களுடைய ஆதங்கத்தை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்க கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் இதை நான் சொல்லிக்கொள்கின்றேன்.’’என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.