ஈரோடு மாநகரில் கொரோனா தடுப்பு பணிக்காக 1,200 தன்னார்வலர்கள் நியமனம்!

 

ஈரோடு மாநகரில் கொரோனா தடுப்பு பணிக்காக 1,200 தன்னார்வலர்கள் நியமனம்!

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம் செய்துள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் தினசரி 1,700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு, வீடாக சென்று சோதனை மேற்கொள்ள உள்ளாட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், ஈரோடு மாநகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, கல்லூரி படித்த, படிக்கும் இளைஞர்கள், பிற தனியார் துறைகளில் பணியாற்றி வந்த ஆண்கள், பெண்கள் என நேர்காணல் மூலம் 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வுமேற்கொள்ள 4 மண்டலங்களிலும் தலா 300 தன்னார்வலர்கள் என 1,200 பேர் நியமித்து உள்ளதாகவும், 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று காய்ச்சல், சளி உள்ளதா? என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

ஈரோடு மாநகரில் கொரோனா தடுப்பு பணிக்காக 1,200 தன்னார்வலர்கள் நியமனம்!

ஆய்வின்போது, அவர்கள் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தவும், ஏற்கனவே வீட்டு தனிமையில் இருப்பவர்கள் வெளியே சென்று வருகிறார்களா? என்றும் கண்காணிப்பார்கள் என்றும் ஆணையர் தெரிவித்தார். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள மருந்தகங்களுக்கு சென்று, பொதுமக்கள் யாராவது காய்ச்சல், சளிக்கு மருந்து எடுத்துக் கொண்டார்களா? என்பது குறித்த விவரமும் கேட்டு அறிவார்கள் என கூறினார்.

மேலும், அவ்வாறு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் முகவரியை கேட்டறிந்து, அது குறித்த விபரங்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள் என்றும், தன்னார்வலர்களை கண்காணிக்க 100 மாநகராட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாவும், அவர்கள் பணியை ஒதுக்கீடு செய்து, தன்னார்வலர்கள் அளிக்கும் அறிக்கையை மாநகராட்சியிடம் சமர்ப்பிப்பார்கள் என்றும் ஆணையர் இளங்கோவன் கூறினார்.