12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தரை தட்டிய வோடாபோன் ஐடியா பங்கு விலை

 

12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தரை தட்டிய வோடாபோன் ஐடியா பங்கு விலை

தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை இன்று வர்த்தகத்தின் இடையே 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூ.6.51ஆக குறைந்தது.

மொபைல் இணைப்புகள் அடிப்படையில் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடாபோன் ஐடியா கடந்த வெள்ளிக்கிழமையன்று தனது ஜூன் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அந்த காலாண்டில் வோடாபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.4,874 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

மொபைல் சேவை

அதன் தாக்கம் இன்றை பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியபோது வோடாபோன் ஐடியா நிறுவன பங்கின் விலை ரூ.9க்கு வர்த்தகம் ஆனது. அதன் பிறகு படிப்படியாக பங்கின் விலை குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் வோடாபோன் ஐடியா பங்கின் விலை 29 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.6.51-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்த பிறகு பல தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் காணாமல் போயின. தற்போது இருக்கும் பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களும் ஜியோவை சமாளிக்க முடியாமல் தடுமாறி கொண்டுதான் இருக்கின்றன.