11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம்! தடையால் கொந்தளித்த இ சிகரெட் பயன்பாட்டாளர்கள்

 

11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம்! தடையால் கொந்தளித்த இ சிகரெட் பயன்பாட்டாளர்கள்

இ சிகரெட்டுக்கான தடை, 11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம் என இ சிகரெட் பயன்பாட்டாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்

சிகரெட் புகை பழக்கத்தை விட நினைப்பவர்கள் இ சிகரெட்டை பயன்படுத்துகின்றனர். பார்ப்பதற்கு சிகரெட் போலவே இருக்கும் இ சிகரெட் ஒரு மின்னணுக் கருவி. இதனுள் நிகோடின் மற்றும் புரோபைலின் கிளைக்கால் திரவம் நிரப்பட்ட குப்பி இருக்கும். அதை சூடுபடுத்தும் சிறுகருவியும், பேட்டரியும் இருக்கும். சிகரெட்டை புகைக்க நினைத்தால் அந்த கருவியை வாயில் வைத்து உறிந்தால் அப்போது ஏற்படும் விசையால் பேட்டரி இயங்கும். பின் நிகோடின் சூடேறி புகை கிளம்பும் அதனை உள்ளிழுக்க புகையிலை சிகரெட்டை புகைப்பது போலவே இருக்கும்.

இ சிகரெட் மாடல்கள்

புகையிலை சிகரெட்டுக்கு சிறந்த மாற்று மற்றும் புற்று நோய் என்ற ஏற்படாது என்ற விளம்பரத்தால் இ சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேவேளையில், நாகரீகம் மற்றும் ஸ்டைல் என்ற நினைப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் இ சிகரெட் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. புகையிலை இல்லை என்பதற்காக இ சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காது என்பது அறியாமை. நிகோடின் உடலுக்குள் எந்த ரூபத்தில் சென்றாலும் கேடுதான் என பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பல நாடுகளில் இ சிகரெட் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசும் இளைஞர்களின் நலன் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இ சிகரெட் விற்பனை, தயாரிப்பு, விநியோகம், கையிருப்பு, பயன்பாடு,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கு நேற்று தடை விதித்தது. இதற்கு இ சிகரெட் புகைப்பவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இ சிகரெட்

இது தொடர்பாக இ சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கான வேப்பர் இந்தியா சங்கத்தின் இயக்குனர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், இ சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட இந்த நாள்,  சிகரெட்டுக்கு சிறந்த மாற்றை பயன்படுத்தி வரும் 11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம். மக்களின் நலத்தை மேம்படுத்துவதை காட்டிலும், புகையிலை சிகரெட் துறையை பாதுகாப்பதில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டுவதை இந்த அவசர தடை வெளிப்படுத்துகிறது என கூறினார்.