தெலங்கானாவில் எளிதாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏழு வயது சிறுவனைக் கடத்திய 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் மீர்பேட்டை டி.எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் தன்னுடைய ஏழு வயது மகனை காணாமல் தேடியுள்ளார். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அப்போது ராஜாவுக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர், உடனடியாக ரூ.3 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் உங்கள் மகனை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜா, போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் உடனே கால் நம்பரை டிரேஸ் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு ஏற்றார்போல, சிறுவனின் தந்தை ராஜாவும் தொடர்ந்து தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இப்போது 25 ஆயிரம் தருகிறேன். மீதி 2.75 லட்சத்துக்கு செக் தருகிறேன் என்று என்று கூறியுள்ளார். இதற்குள்ளாக போலீசார் செல்போன் டவர் சிக்னலை வைத்து இருப்பிடத்தை கண்டறிந்தனர்.
பார்த்தால் அது, அந்த சிறுவன் படித்த பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கோவில். உள்ளே சென்று பார்த்தால், ராஜாவின் மகன் தன்னுடன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மற்றொரு மாணவனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த 10ம் வகுப்பு மாணவன்தான் ராஜாவுக்கு போன் செய்து மிரட்டியது தெரிந்தது.

இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளதால் ராஜாவின் மகனுடன் 10ம் வகுப்பு மாணவன் நட்பாக பழகியுள்ளான். அதனால், அவன் வந்து அழைத்ததும் சிறுவன் சென்றுள்ளான். அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டு ராஜாவுக்கு அவன் போன் செய்துள்ளான். பின்னர் வந்து சிறுவனுக்கு விளையாட்டு காட்டி வந்துள்ளான்.
சீக்கிரம் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில், பல சினிமாக்களைப் பார்த்து கடத்தலில் இறங்கியதாக 10ம் வகுப்பு சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இதைத் தொடர்ந்து சிறுவன் மீது பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.