10ம் வகுப்பு: அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்கள், மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் – அரசு தேர்வுகள் இயக்ககம்

 

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையில் கல்வித்துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவீடு மூலம் 20 சதவீதமும் கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறியது.

10ம் வகுப்பு: அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்கள், மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் – அரசு தேர்வுகள் இயக்ககம்

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியலுக்கு மட்டும் 75 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட வேண்டும் என்றும், மொழிப்பாடம் ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியலுக்கு 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் ஜூலை முதல் வாரத்தில் இப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.