102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் வெளுத்து வாங்கும் மழை

 

102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் வெளுத்து வாங்கும் மழை

நம் நாட்டில் நடப்பு செப்டம்பர் மாதம் 102 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்த மாதமாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பல மாநிலங்கள் தற்போது பெய்து வரும் மழையால் மிதந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் வானிலை ஆராய்ச்சி ஜெனரல் இயக்குனர் மிருத்யுஞ்சய் மோகபத்ரா இது தொடர்பாக கூறியதாவது: இந்த ஆண்டு பருவமழை தாமதமாகதான் தொடங்கியது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் பெய்த மழை வழக்கமான அளவை காட்டிலும் 33 சதவீதம் பற்றாக்குறை என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்தது. பல மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்றோடு முடிவடையும் 4 மாத காலத்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. நேற்று வரை இந்தியா முழுவதும் சராசரி பருவமழை அளவு 956.1 மி.மீட்டராக உள்ளது. இது வழக்கமான 877 மி.மீ.யை காட்டிலும் அதிகமாகும்.

பருவமழை

குறிப்பாக இன்றோடு முடிவடையும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 247.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் 1901ம் ஆண்டுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்த மாதமாக இருக்கும். இன்றைக்குள் 1983ம் ஆண்டு மழை பெய்த அளவை (255.8 மி.மீ.) கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை

குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு கனமழை இருக்கும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது நடந்தால் 100 ஆண்டுகளில் அதிக மழை பெய்த மாதமாக 2019 செப்டம்பர் இருக்கும். இதற்கு முன் 1917 செப்டம்பரில் 285.6 மி.மீ. மழை பெய்து இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.