கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்தமுயன்ற 10 டன் ரேஷன் அரிசியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இதை தடுக்க வருவாய் மற்றும் காவல் துறையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று குழித்துறை பகுதியில் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தர தாஸ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கேரளாவுக்கு லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச்சென்று களியக்காவிளை அடுத்த திருத்துவபுரம் பகுதியில் மடக்கி பிடித்தனர். அப்போது, லாரியில் இருந்த ஓட்டுநர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதனை தொடர்ந்து, லாரியில் ஏறி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 10 டன் அளவிலான ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் விசாரணையில், ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், லாரியை தாலுகா அலுவலகத்திலும் அதிகாரிகள் ஒப்படைத்தார். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.