அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10.25 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு!

 

அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10.25 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு!

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான 10.25 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் கிராமத்தில் பழமையான வாகீஸ்வரர் திருக்கோயில், சென்றாயப்பெருமாள் திருக்கோயில் மற்றும் கரிய காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 70 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10.25 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு!

இதில் சுமார் 12.40 ஏக்கர் நிலங்களை அப்பகுதியில் உள்ள 6 பேர் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததோடு, அவர்கள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் செய்து வைத்திருந்தனர். இதனை அடுத்து, கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில், இந்து சமய அறநிலைத்துறையினர் 6 பேர் மீதும் வழக்குத் தொடுத்தனர். அதில் 4 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, 10.25 ஏக்கர் திருக்கோயில் சுவாதீனம் எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அன்னக்கொடி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தியூர் வட்டாட்சியர் முன்னிலையில், போலீசார் பாதுகாப்போடு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு, அங்கு திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் என அறிப்பு பலகையும் வைக்கப்பட்டது.