10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: அடம் பிடிக்கும் பாஜக எம்.பி.,

 

10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன்: அடம் பிடிக்கும் பாஜக எம்.பி.,

தீபாவளி பண்டிகையின் போது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என பாஜக எம்.பி., ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போபால்: தீபாவளி பண்டிகையின் போது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என பாஜக எம்.பி., ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6, 7 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனிடையே, பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது என கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் பட்டாசு விற்பனைகோ, உற்பத்திக்கோ தடை இல்லை என உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவு 11.55 முதல் 12.30 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பட்டாசு உற்பதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிப்பேன் என மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி தொகுதியின் பாஜக எம்.பி., சிந்தாமணி மாளவியா கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இந்து பாரம்பரியங்களில் பிறர் தலையீட்டை நான் சகித்து கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும் அதற்காக நான் மகிழ்ச்சியடைவேன். முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை. தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படியே நான் கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன் என பதிவிட்டுள்ளார்.