“1 கோடியில் வீடு கட்ட வேண்டும் என்பதே என் கனவு” : போலீசாரை அலறவிட்ட கொள்ளையன்!

 

“1 கோடியில் வீடு கட்ட வேண்டும் என்பதே  என் கனவு” : போலீசாரை அலறவிட்ட கொள்ளையன்!

கைது செய்தபோலீசார் அவர்களை  பீர்கன்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், சேலையூர், சிட்லபாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக வீடுகளில் கொள்ளை போயுள்ளது. இதுகுறித்த தொடர் புகாரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.  அதில்  புது பெருங்களத்தூர், என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் ஐடி நிறுவன ஊழியர் கார்த்திகேயன் கடந்த ஜனவரி மாதம் சபரிமலை சென்ற நிலையில் அவரது வீட்டில் 45 சவரன் தங்க நகைகள் திருடு போனது. இதுகுறித்த புகாரில் அவரது வீட்டில்   இருந்த சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது எழிலரசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது  ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் தாம்பரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதும், பலமுறை திருட்டு வழக்குகளில் சிறைக்குச் சென்று திரும்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

ttn

கொள்ளையனைப் பிடிக்க  தனிப்படை ஒன்றை அமைத்த போலீசார் அவரின் செல்போன் சிக்னல் மாறி மாறி காட்டியதால் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து  சுமார் 70 நாள்களுக்குப் பிறகு கொள்ளையனின் செல்ஃபோன் சிக்னல் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காட்டியுள்ளது. இதனால் மாறுவேடத்தில் சென்ற போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்பு கொள்ளையடித்த நகைகளை உத்திர மேரூரில் உள்ள தனது வீட்டில் வைத்திருப்பதாக கூறினார். இதனால் கொள்ளையனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு தனிப்படை விரைந்தது. அங்கு  30 லட்சத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட  வீட்டிலிருந்து 78 சவரன், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் சிக்கின. மேலும் இதற்கு அவரது மனைவி அம்மு  உடந்தையாக இருந்ததால் இருவரையும் கைது செய்தபோலீசார் அவர்களை  பீர்கன்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

ttnn

அப்போது கொள்ளையன் எழிலரசன் அளித்த வாக்குமூலத்தில் “முப்பது வருடங்களாக திருட்டை தொழிலாக செய்து வந்தேன். என் முதல் மனைவி இறந்துவிட்டாள். அம்முவை உத்திர மேரூரில் திருட்டு தொழில் செய்யும் போது பார்த்தேன்.  பின்பு என்னுடன் வாழ்ந்தால் நகை , பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்தேன். அம்மு தான் வீட்டை நோட்டமிட்டு எனக்கு சொல்வாள். போலீசார் கண்டுபிடிக்க கூடாது என சாதாரண போன் பயன்படுத்தி வந்தேன். ஒரே இடத்தில் தாங்காமல் சொகுசு பேருந்தில் பயணம் செய்து வந்தேன். எனது கனவே ஒரு கோடியில் வீடு கட்ட வேண்டும் என்பது தான்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். இதனையடுத்து எழிலரசன், அம்மு ஆகிய இருவர் மீதும் 13 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.