ஹெல்மெட் அணியாமல் வந்தால் 10 திருக்குறள் எழுதணும்: டிராஃபிக் போலீசின் நூதன தண்டனை!

 

ஹெல்மெட் அணியாமல் வந்தால் 10 திருக்குறள் எழுதணும்: டிராஃபிக் போலீசின் நூதன தண்டனை!

இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்: இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் திருக்குறளை எழுத சொல்லி நூதன தண்டனை வழங்கி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் புல்லவராயன்குடிக்காடு சேர்ந்தவர் நாவுக்கரசன். இவர் பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன் தற்போது சாலையில் இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் கல்லூரி மாணவர்களுக்கு அபராதம் விதிக்காமல், அவர்களை அழைத்து, அவர்கள் கையில் ஒரு பேப்பர், பேனா கொடுத்து பள்ளியில் படிக்கும் போது படித்த திருக்குறளில் ஏதாவது 10 குறளை பிழையில்லாமல்  எழுத சொல்லி நூதன தண்டனை விதித்து வருகிறார். அப்படி 10 திருக்குறளையும் சரியாக எழுதிவிட்டால் அபராதம் விதிக்காமல் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரையை கூறி வழியனுப்பி வைக்கிறார்.

அவ்வாறு 10 குறளை எழுதவில்லையென்றால் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வருகிறார். இதில் சில மாணவர்கள் படித்ததில் நினைவில் இருந்த 10 திருக்குறளை கட, கடவென்று எழுதி கொடுத்து விட்டு செல்கின்றனர். பல மாணவர்கள் 10 திருக்குறளை கூட எழுத முடியாமல் விழி பிதுங்கி நின்றதோடு மட்டுமல்லாமல்  அபராத தொகையை செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்த நூதன தண்டனை தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இன்ஸ்பெக்டர் நாவுக்கரசன், பள்ளி மாணவ-மாணவிகள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தால், அவர்களை பிடித்து, அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்து, இரு சக்கர வாகனம் கொடுத்தற்காக பெற்றோருக்கு அபராதம் விதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.