‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்’ – ரஜினியை வறுத்தெடுத்த ‘திமுக’வின் முரசொலி!

 

‘ஹூ ஈஸ் தி பிளாக் ஷீப்’ – ரஜினியை வறுத்தெடுத்த ‘திமுக’வின் முரசொலி!

நடிகர் ரஜினி அரசியல் பிரவேசத்தை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது.

சென்னை: நடிகர் ரஜினி அரசியல் பிரவேசத்தை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மிகக்கடுமையாக விமர்சித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவோர் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். ஆனால், அவரோ தன் ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில், “ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் சாதித்து விட முடியாது. மக்களின் ஆதரவு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. 30, 40 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டும் மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடாது. தமிழகத்தில் புது அரசியலை அறிமுகப்படுத்தி, அதன் மூலம், நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும்” என குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமின்றி, மற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான அந்த கடிதம், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று ஒரு முழு பக்கத்திற்கு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை விமர்சித்து ‘கேள்வி-பதில்’ வடிவில் கட்டுரை வெளியாகியுள்ளது.

“அப்பாவி ரசிகன்” என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் கேள்வி கேட்பது போன்றும், அதற்கு ரஜினி பதில் அளிப்பது போன்றும் அந்த கேள்வி பதில் கட்டுரை அமைந்துள்ளது. 

குறிப்பாக, பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரை போல் கட்சி ஆரம்பித்து கொள்கையில் உறுதியாய் நின்று போராட வேண்டியது தானே ? 

உங்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவி வேண்டும். அதற்காக ரசிகர்கள் நாயாய் பேயாய் உழைக்க வேண்டுமா? என்று அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது இப்படி இருக்க, இன்று மீண்டும் தன் ரசிகர்களுக்கு ரஜினி எழுதியுள்ள கடிதத்தில், “நாம் எந்த பாதையில் போனாலும் அது நியாயமானதாக இருக்க வேண்டும். நான் கூறியது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருந்த உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு நன்றி. என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது” என மறைமுகமாக திமுகவை சாடியுள்ளார்.