ஹால்டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி அக்காவுக்காகத் தேர்வு எழுதிய தங்கை.. திருச்சியில் ஆள்மாறாட்டம்!

 

ஹால்டிக்கெட்டில் புகைப்படத்தை மாற்றி அக்காவுக்காகத் தேர்வு எழுதிய தங்கை.. திருச்சியில் ஆள்மாறாட்டம்!

தேர்வு எழுதச் செல்வதற்கு முன்னர், ஹால்டிக்கெட்டில் இருந்த தனது அக்காவின் புகைப்படத்தை மாற்றி தன் புகைப்படத்தை ஒட்டி, தேர்வு மையத்துக்குச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி நடைபெற்றது. அதற்காக, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அதே போல, திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அந்த தேர்வுக்கு மதுரையைச் சேர்ந்த  ராமலட்சுமி (26) என்பவர் விண்ணப்பித்துள்ளார். அதனால், தேர்வில் கலந்து கொள்ள அவருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது. 

ttn

தேர்வு நடைபெற்ற அன்று  ராமலட்சுமிக்குப் பதிலாக அவரது தங்கை  மீனாட்சி(23) என்பவர் தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதச் செல்வதற்கு முன்னர், ஹால்டிக்கெட்டில் இருந்த தனது அக்காவின் புகைப்படத்தை மாற்றி தன் புகைப்படத்தை ஒட்டி, தேர்வு மையத்துக்குச் சென்றுள்ளார். சோதனை செய்யும் அதிகாரிகள் அதனைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

ttn

அதன் பிறகு, இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அவர் புகைப்படத்தை மாற்றி ஆள்மாறாட்டம் செய்து தான் தேர்வு எழுதினார் என்பது தெரிய வந்துள்ளது. இதனால், திருச்சியில் உள்ள  தமிழ்நாடு வணிகவியல் நிறுவன சங்க அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்ததாக, மீனாட்சி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் தங்கை மீனாட்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவன் உட்பட நிறைய மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கள ஆய்வில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.