ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் தலைவராக சென்னை மாணவி தேர்வு: குவியும் வாழ்த்து!

 

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் தலைவராக சென்னை மாணவி தேர்வு: குவியும் வாழ்த்து!

புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேம்பிரிஜ் : புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் முக்கியத் தலைவர்கள் படித்துள்ளனர். இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களில் 47 பேர் இங்குப் படித்தவர்கள். 32 பேர் பிரதமர்களாக பிற்காலத்தில் உருவாகியுள்ளனர். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப்போட்டி நடந்தது. இதில்  சென்னையைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் என்ற மாணவி போட்டியிட்டார். இவரின் அணி சார்பாக ஹூஷா என்பவர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நடைன் எம்.கூரி மற்றும் அர்னவ் அகர்வால் ஆகியோர் இவர்களை எதிர்த்துப் போட்டியிட்டனர். தேர்தலில் ஸ்ருதி அணிக்கு 41.5 சதவிகித ஓட்டுகளும் எதிர் அணிக்கு 26.6 சதவிகித ஓட்டுகளும் கிடைத்தன.இதனால் ஸ்ருதி வெற்றி பெற்றதாக இளநிலை மாணவர்கள் தேர்தல் மையம் அறிவித்துள்ளது. 

இது குறித்து கூறியுள்ள ஸ்ருதி, ‘மாணவர்களின் கல்வியில் அக்கறைக் காட்டுவது, மனதளவில் பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார் செய்வது பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல்ரீதியான தொல்லைகளைத் தடுப்பது, மாணவர்களின் சமூகப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது , பாலியல் சமத்துவத்தை எட்டுவது போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவரான ஸ்ருதிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.