ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்! நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

 

ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்! நன்றி தெரிவித்த பிரதமர் மோடி

அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோராவுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள அந்நாட்டின் மிகப்பெரிய கால்பந்து மைதானத்தில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் வழக்கம் போல் காங்கிரஸ் தலைவர்கள் மோடியை விமர்சனம் செய்தனர். ஆனாலும் அந்த கட்சியை சேர்ந்த பிரபல தலைவர்களில் ஒருவரான மிலிந்த் தியோரா, மோடியை பாராட்டி டிவிட் செய்து இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பதிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்து டிவிட் செய்து இருந்தார்.

மிலிந்த் தியோரா

மிலிந்த் தியோரா தனது டிவிட்டரில், பிரதமர் மோடியின் பேச்சு இந்தியாவின் மென்மையான சக்தி இராஜதந்திரத்திற்கு முதன்மையானது. ஆரம்ப காலகட்டத்தில் இந்தியா-அமெரிக்காக இடையிலான ஆழ்ந்த உறவுகளை கட்டமைத்தவர்களில் எனது தந்தை முரளிபாய்-ம் (முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா) ஒருவர். டொனால்ட் டிரம்பின் விருந்தோம்பல் மற்றும் இந்திய அமெரிக்கர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது எங்களுக்கு பெருமை சேர்க்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டிவிட்டரில், நன்றி மிலிந்த் தியோரா. அமெரிக்கா உடனான வலுவான உறவை ஏற்படுத்த எனது நண்பர் மறைந்த முரளி தியோரா ஜியோவின் அர்ப்பணிப்பை நீங்கள் முன்னிலைப்படுத்தியது முற்றிலும் சரியானது. நம் தேசங்களுக்கு இடையிலான உறவுகள் வலுப்பெறுவதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அமெரிக்க அதிபரின் அரவணைப்பும், விருந்தோம்பலும் மிகசிறப்பாக இருந்தது என பதிவு செய்து இருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா

இதனையடுத்து மிலிந்த் தியோரா , நன்றி நரேந்திர மோடி ஜி. முரளிபாய் தேசத்துக்கு முதலிடம் கொடுத்தார். இந்தியாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் உள்ள அனைத்து அரசாங்கங்களுடன் இணைந்து நமது பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவை ஆழப்படுத்தினார். எனது ஜனநாயக மற்றும் குடியரசு நண்பர்களுடன் எனது பல உரையாடல்களின் போது, 21வது நூற்றாண்டின் இந்திய தலைமையை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் என பதில் பதிவு செய்து இருந்தார்.