ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு வாங்கி கொடுத்த பிரதமர் மோடி

 

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு வாங்கி கொடுத்த பிரதமர் மோடி

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை நீக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை எழுந்து நின்று பாராட்டுங்கள் என ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஐ.நா. சபையின் பொது கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப இருந்த பாகிஸ்தானை அதற்கு முன்பாகவே இந்த கூட்டத்தில் தோற்கடித்து விட்டார் பிரதமர் மோடி.

மோடி, டிரம்ப்

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: 70 ஆண்டுகளாக சவாலாக இருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370க்கு நாங்கள் விடை கொடுத்து விட்டோம். சிறப்பு சட்டப்பிரிவால் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் தங்களது உரிமை மற்றும் முன்னேற்றத்தை இழந்தனர். தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் தங்களுக்கு சாதமாக அதனை பயன்படுத்தி கொண்டனர். தற்போது சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால் ஒவ்வொரு இந்தியனும் பெறும் அதே உரிமைகள் ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் மக்களுக்கும் இருக்கு.

கடந்த மாதம் குடியரசு தலைவர் உத்தரவின் வாயிலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான பாகுபாடு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல மணி நேரம் விவாதம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இந்த விவாதம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. எங்களுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடையாது இருந்தாலும் இரு அவைகளிலும் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் காஷ்மீர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மோடி

இதனை சாத்தியமாக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை எழுந்து நின்று பாராட்டும்படி உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். மோடியின் இந்த பேச்சு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் அமெரிக்க தலைவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதன் மூலம், ஐ.நா. சபையின் பொது கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுக்க காத்திருந்த பாகிஸ்தானுக்கு ஹவுடி மோடி கூட்டத்திலேயே முதல் அடியை கொடுத்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி.