ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம் 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்.

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திருத்தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற வைணவத் திருத்தலங்களுக்கு இணையாக போற்றப்படுகிறது.

srivilliputhur

ஸ்ரீஆண்டாளின் திருப்பாவையில்லாமல் எந்தவொரு திவ்ய தேசத்திலும் பூஜைகள் நடைபெறுவது கிடையாது என்பது ஸ்ரீஆண்டாளின் தனிச்சிறப்பிற்கு ஒரு வரலாற்று சான்றாகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பு பூஜைகள் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

srivillipuththur

மார்கழி மாத சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 2:30 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் திருப்பாவை பட்டில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் எழுந்தருளினர். அதனையடுத்து அங்கு கிரிபட்டர் சிறப்பு பூஜை நடத்தினார். 

பின்னர் அரையர் நாதமுனி முகுந்தனின் அரையர்சேவையும் வேதபிரான் அனந்தராமன் பட்டரின் வேதம் படித்தலும், திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டும், தீர்த்தகோஷ்டி, சேவாகாலமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

srivillipuththur

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் நாளை காலை 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலை, 3:30 மணிக்கு, பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, காலை, 6:20 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவிக்க எழுந்தருள்கின்றனர்.  

அதன் பின்னர் மாடவீதிகள் சுற்றிவந்து ராப்பத்து மண்டபம் சேருகின்றனர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரியபெருமாள் பத்தி உலாவுதல் திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி முடிந்து, பிற்பகல், 3:30 மணிக்கு ஆஸ்தானம் சென்றடைகின்றனர்.