ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு!

 

ஸ்ரீரங்கம் : வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்து கோவிந்தா… கோவிந்தா… என்று முழக்கமிட்டனர். 

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

srirangam

இவ்விழாவில் கடந்த  8 ஆம் தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வந்தார். 

 நேற்று பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 

இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.

இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது.

srirangam

பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார். 

திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அதனையடுத்து இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார். பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

srirangam

நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

இதனால் கோயில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.