ஸ்ரீரங்கம்: நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் புறப்பாடு

 

ஸ்ரீரங்கம்: நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் புறப்பாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் புறப்பாடு இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

திருச்சி:

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.இவ்விழாவில் கடந்த  8 ஆம் தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. 

srirangam

இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான நேற்று நம்பெருமாள் முத்துக்குறி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர்  7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். 

அதனையடுத்து காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவையுடன் பொது ஜன சேவையும்  நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரை ராவணவதம் அரையர் இரண்டாம் சேவையும்  நடைபெறுகிறது. 

srirangam

இன்று மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படுகிறார். 

நாளை வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

இதனையொட்டி நாளை அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்படுகிறார். 

அதனை தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் 5.45 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசமாகி காலை 7 மணிக்கு சாதரா மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

srirangam

காலை 8 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இன்று இரவு 8:00 மணி முதல் நாளை பகல் 2:00 மணி வரை பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்ரீரங்கம் வந்து செல்லும் பஸ்களுக்கும் லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கும் வழித்தட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

srirangam

பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்காக சவுக்கு கம்புகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.