ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா? பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

 

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா? பசுமை தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. 

ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும். இல்லையெனில், ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற வாய்ப்புள்ளது என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதாகவும், இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தருண் அக்ர்வால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்த பின் முடிவுகளை தனித்தனியாக சீல் வைக்கப்பட்ட 48 கவக்ரளில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், 3 பேர் அடங்கிய குழு ஸ்டெர்லைட் ஆலையை செய்த ஆய்வை வைத்து வேதாந்த குழுமம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இந்த உத்தரவு அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.