ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது: ஆய்வு குழு அறிக்கையில் அதிர்ச்சி

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது: ஆய்வு குழு அறிக்கையில் அதிர்ச்சி

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் எனவும் தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் எனவும் தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. சுமார் 13 உயிர்களை காவு வாங்கிய அந்த போராட்டத்துக்கு பின்னர், ஆலைக்கு சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வெறும் அரசாணையை பிறப்பித்து விட்டு ஆலையை மூட முடியாது, இது வெறும் கண்துடைப்பு என பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை எழுப்பி வந்தனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக அந்த நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இக் குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழவின் தலைவராக மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். இக்குழுவினர், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து இரு தினங்களுக்கு முன்னர் பசுமை தீர்ப்பாயத்தில் சீலிட்ட கவரில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது, தருண் அகர்வால் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் விவரம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். காற்று மாசு, நிலத்தடி நீர் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.