ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மனு மீது ஜன.,8-ல் விசாரணை

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மனு மீது ஜன.,8-ல் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வருகிற 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வருகிற 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடைபெற்றது. சுமார் 13 உயிர்களை காவு வாங்கிய அந்த போராட்டத்துக்கு பின்னர், ஆலைக்கு சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக வேந்தாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், வருகிற 8-ம் தேதி இதன் மீது விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும். தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்பாயத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.