ஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை: மாவட்ட ஆட்சியர்

 

ஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை: மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது. மேலும் ஆலையை திறந்தால் போராட்டம் வெடிக்கும் என மக்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை. இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன. அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை.

மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. உடனடியாக மின்இணைப்பு எதுவும் வழங்கப்படவில்லை. கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்று தான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றார்.