ஸ்டிரைக்…ஸ்டிரைக்…. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். பணியாளர்கள்

 

ஸ்டிரைக்…ஸ்டிரைக்…. மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். பணியாளர்கள்

சம்பளம் தருவதை காலதாமதம் செய்தால் விரைவில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என மத்திய அரசுக்கு எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபடும் வரும் மத்திய அரசுக்கு சொந்தமான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்க என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனை செய்து வருகிறது. அதேசமயம் அந்த நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி விடலாம் என மத்திய அரசுக்கு சிலர் ஆலோசனை சொல்லி வருவதாக தகவல்.

பி.எஸ்.என்.எல்.

எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களில் வருவாயை காட்டிலும் செலவு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக தங்களது பணியாளர்களுக்கு சம்பளம் கூட போட முடியாத நிலையில் அந்த நிறுவனங்கள் உள்ளன. எம்.டி.என்.எல். பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை என தகவல்.

ஆர்ப்பாட்டத்தில் பணியாளர்கள் (கோப்பு படம்)

இதனையடுத்து பொறுமை இழந்த எம்.டி.என்.எல். பணியாளர்கள் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக எம்.டி.என்.எல். சங்கங்கள் மற்றும் அசோசியஷேன்ஸ் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் சிங் கூறுகையில், நாட்கள் செல்ல செல்ல போராட்டத்தின் அளவு மற்றும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எங்களது பிரச்னை விரைவில் தீர்க்கப்படவில்லையென்றால் நாங்கள் சும்மா உட்கார்ந்து இருக்க மாட்டோம். எங்களது போராட்டத்தை பிரதமர் அலுவலகத்திலும் நடத்துவோம். என தெரிவித்தார். விரைவில் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் மற்றும் எம்.டி.என்.எல். நடத்தும் போராட்டத்தில் இணைந்து கொள்வோம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.