ஸ்டிரைக் செய்து கைதான ஆசிரியர்.. கல்யாண மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம்

 

ஸ்டிரைக் செய்து கைதான ஆசிரியர்.. கல்யாண மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம்

நாங்கள் பாதித்தாலும் பரவாயில்லை.. எங்கள் பிள்ளைகளை மட்டும் விட்டு விடவே மாட்டோம் என்று கைதான ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நிகழந்துள்ளது

புதுக்கோட்டை: நாங்கள் பாதித்தாலும் பரவாயில்லை.. எங்கள் பிள்ளைகளை மட்டும் விட்டு விடவே மாட்டோம் என்று கைதான ஆசிரியர் தன் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நிகழந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் மாணவர்களை தவிக்க விட்டுவிட்டு போராட்டம் நடத்தலாமா? என்று கேள்வி எழுகிறது. மற்றொரு பக்கம், எங்களுக்கு என்ன போராட ஆசையா? எங்கள் தேவையை அரசு நிறைவேற்ற மறுக்கிறதே என்று கேள்வியும் எழுகிறது. மேலும் ஆசியர்களின் இப்படி போராட்டம் நடத்தி கொண்டிருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள், கல்வியாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

jactogeo

இதனிடையே ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களும் கைதாகி வருகிறார்கள். அப்படித்தான் கந்தர்வ கோட்டையிலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு 3,620 பேர் நேற்று கைதானார்கள். அவர்கள் அனைவரும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆங்கில ஆசிரியர் தெய்வீகனும் ஒருவர். போராட வந்து இப்படி கைதாகி அடைக்கப்பட்டாலும், தன்னுடைய வகுப்பு மாணவர்களை நினைத்து கவலைப்பட்டார். இதற்காக தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த கல்யாண மண்டபத்துக்கே வகுப்பு மாணவர்களை வரவழைக்க முடிவு செய்தார்.

jactogeo

10 மற்றும் 9ம் வகுப்புகளின் மாணவ தலைவர்களை வரவழைத்து, அவர்களிடம் நேற்று நடத்தவேண்டிய பாடம் குறித்து விளக்கம் அளித்தார். பிறகு தான் சொல்லி கொடுத்ததை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் பாடமாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மாணவர்களை பற்றிக் கவலைப்படவில்லை என ஆசிரியர்களை மற்றவர்கள் விமர்சித்து வந்த நிலையிலும், போராடி கைதான நிலையிலும், இந்த ஆசிரியர் மாணவர்களை அழைத்து பாடம் நடத்தியது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது