ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் அதிரடி

 

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் அதிரடி

தங்களது நீண்ட கால கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.

தெலங்கானா மாநில போக்குவரத்து கழகத்தில் சுமார் 49,340 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும் என்பது உள்பட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தெலங்கானா அரசு அன்று மாலை 6 மணிக்குள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என பணியாளர்களுக்கு கெடு விதித்தது.

டி.எஸ்.ஆர்.டி.சி. பஸ்

ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்  மட்ட சந்திப்பு நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் தற்போது 1,200 பணியாளர்கள் (பணிக்கு திரும்பியவர்கள்) மட்டுமே பணிபுரிகிறார்கள். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்களை திரும்ப பணிக்கு சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. புதிய பணியாளர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.