ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு பிசுபிசுப்பிக்கிறது: தமிழிசை கிண்டல்

 

ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு பிசுபிசுப்பிக்கிறது: தமிழிசை கிண்டல்

ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

சென்னை: ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலாக விமர்சித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சியினர் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இதற்கான பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் உடன் இணைவதாகத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேச உள்ளார். இதன் பிறகு நவம்பர் 9-ஆம் தேதி  கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “சந்திரபாபு நாயுடு – ஸ்டாலின் சந்திப்பு திமுகவிற்கு வேண்டுமானால் பரபரப்பானதாக இருக்கலாம். ஆனால், எங்களை பொறுத்த வரையில் இந்த சந்திப்பு பிசுபிசுப்பானது. 
 
ஏனெனில், என்.டி. ராமாராவ் கட்சி தொடங்கியதே காங்கிரஸை எதிர்த்து தான். அதை மறந்துவிட்டு தற்போது சந்திரபாபு நாயுடு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். ஆகையால், இந்த சந்திப்பு பிசுபிசுக்கப்போகும் சந்திப்பு என பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த நடவடிக்கை சிறந்த நடவடிக்கை என்றும் அதனால் கருப்புப் பணங்கள் திரும்ப வந்துள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.