ஸ்டாலினை வங்க மொழியில் பேச வைத்து மோடி சாதனை: தமிழிசை பெருமிதம்

 

ஸ்டாலினை வங்க மொழியில் பேச வைத்து மோடி சாதனை: தமிழிசை பெருமிதம்

ஸ்டாலினை வங்க மொழியில் பேச வைத்து பிரதமர் மோடி சாதனை புரிந்துள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்

சென்னை: ஸ்டாலினை வங்க மொழியில் பேச வைத்து பிரதமர் மோடி சாதனை புரிந்துள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், வங்க மொழியில் தனது உரையை தொடங்கி பேசினார். மேற்கு வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நமது அனைவரின் சிந்தனை. மே மாதம் வரவிருக்கும் பொதுத் தேர்தல்  நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக இருக்கும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றார்.

இந்த மேடையில் நான் இந்தியாவை பார்க்கிறேன். வேறு  மொழியை சேர்ந்தவர்களும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்து உள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் தாரக மந்திரம் எனவும், வங்கத்து விவேகானந்தருக்கு  குமரியில்  நினைவு மண்டம் அமைத்துள்ளோம் எனவும் பேசினார்.

இந்நிலையில், ஸ்டாலினை வங்க மொழியில் பேச வைத்து பிரதமர் மோடி சாதனை புரிந்துள்ளதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என்றும், சண்டையிட்ட எதிரி கட்சிகளை இணைத்து, பிரதமர் மோடி சாதனை நிகழ்த்தியுள்ளதாகவும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை பார்த்து பிரதமருக்கு பயம் என்கிறார்கள். ஆனால், மோடியை பார்த்து அவர்களுக்கு பயம்.  அவர்களுக்கு எவ்வளவு பயம் என்பதை அந்த மேடை காட்டுகிறது. தமிழை தவிர வேறு மொழியை கற்க மாட்டோம் என்று சொன்ன ஸ்டாலினை வங்க மொழி பேச வைத்திருக்கிறார் மோடி. பெரியார் மட்டுமே பேசிய ஸ்டாலின் விவேகாந்தரை பற்றி பேச வைத்திருக்கிறார் மோடி. மாநில சுயாட்சியை பேசிய ஸ்டாலினை ஒன்றுபட்ட இந்தியா என பேச வைத்திருக்கிறார் இது தான் மோடியின் சாதனை என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.