வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!

 

வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!

வங்கிக்கடன் மோசடி வழக்கில் தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

லண்டன்: வங்கிக்கடன் மோசடி வழக்கில் தப்பிச் சென்ற நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.

nirav modi

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்திலேயே, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர். அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்து வரும் நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் விடப்பட்டுள்ளது. அதேபோல், நிரவ் மோடிக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, இந்தியா வந்தால் என்னை அடித்துக் கொன்று விடுவார்கள் என அச்சம் தெரிவித்து தனது வழக்கறிஞர் மூலம் நிரவ் மோடி கடிதம் அனுப்பியிருந்தார்.

nirav modi

இதனிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்திய அரசு, நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதேபோல், நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவில் நடத்தி முடிக்க லண்டன் நீதிமன்றத்தில் பிரிட்டன் உள்துறை அமைச்சகமும் கோரிக்கை வைத்ததாக, அமலாக்க துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, லண்டன் நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி நிரவ் மோடிக்கு  பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.