வைகோ மீது தமிழிசை சரமாரி தாக்கு..!

 

வைகோ மீது தமிழிசை சரமாரி தாக்கு..!

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோவை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை தன் ட்விட்டர் பக்கத்தில் மிகக் கடுமையாக  விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “விவசாயிகள் 4 மாதமாக மழை, வெயில், பனி என்று பார்க்காமல், சாலையில் கிடந்தார்கள். ஆனால் அவர்களை பார்க்க 5 நிமிடங்கள் ஒதுக்காத பொறுப்பற்ற ஒரு பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டுக்கு சாபக்கேடு. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்க்க தமிழ்நாட்டுக்கு வரவில்லை.

விதவிதமாக உடைகள் உடுத்துவது, தினம் ஒரு நாட்டிற்கு செல்வது என 2 போதைகள் மோடிக்கு உள்ளன. இதில் இருந்து அவர் ஒரு காலமும் வெளியில் வரமுடியாது. அவரிடம் இருந்து பதவியையும், அதிகாரத்தையும் மக்கள் பறிக்க வேண்டும்” என காட்டமாக பேசியிருந்தார்.

இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “பாரதப்பிரதமர் மோடிஅவர்களை நிதானம் இழந்து தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் நரச நடையில் ஒருமையில் விமர்சிக்கும் வைகோ அவர்களை தமிழக பாஜக கண்டிக்கிறது .கள்ளத்தோணி முதல் ஐயோ கொலைப்பழி போலி நாடகங்களால் தீக்குளித்த மதிமுக தொண்டர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது” என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதோடு மட்டுமின்றி, விதவிதமாக உடை மாற்றி தினம் ஒரு நாடு விமானத்தில் மோடி போதையில் செல்வதாக கூறும் கள்ளத்தோணி கட்டுமரங்களே விதவிதமாக விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்த கட்சி இலங்கைத்தமிழரை கொன்று குவிக்க துணை நின்ற காங்கிரசுடன் கூட்டணிக்கு காத்திருக்கும் வைகோ இலங்கை தமிழர் பற்றி இனிமேலும் பேசதகுதியில்லை எனவும் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

modi

பிரதமர் மோடியின் தோள் மீது கை போட்டு பேசும் அளவிற்கு அவருடன் நட்பில் இருந்த வைகோ மீது, பாஜகவின் மாநில தலைவர் இவ்வாறு கடும் வசை சொற்களை வீசுவது நாகரிக அரசியலுக்கு அழகல்ல என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.