வைகோவை சந்திக்கிறார் ஸ்டாலின்…. சர்ச்சைகளுக்கு விழுமா முற்றுப்புள்ளி?

 

வைகோவை சந்திக்கிறார் ஸ்டாலின்…. சர்ச்சைகளுக்கு விழுமா முற்றுப்புள்ளி?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க இருக்கிறார்.

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்க இருக்கிறார்.

திமுகவுடன் மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணியில் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் கூறி இருந்தார். இதனையடுத்து, துரைமுருகன் பேசியது மதிமுகவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என கூறிய வைகோ, கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை திமுக தலைமை சொல்லட்டும் எனவும் கூறியிருந்தார். இதேபோல் திருமாவளவனும், தோழமை கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள் என திமுக தலைமை அறிவிக்க வேண்டும் என பேசியிருந்தார். இதனையடுத்து நேற்று மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இதனால் திமுக – விசிக உறவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது துரைமுருகன் பேசியது குறித்தும், கூட்டணி குறித்தும் இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது. மேலும் இந்த சந்திப்பிற்கு பிறகு திமுக – மதிமுக – விசிக குறித்து திமுக தலைமையிடம் இருந்து அறிவிப்பு வர வாய்ப்பு இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக – காங்கிரஸ் – மதிமுக – விசிக – இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும். தங்களது தலைமை, தேர்தல் கூட்டணி குறித்து விளக்கமளித்து உலாவி வரும் சர்ச்சைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்கும் என திமுகவினர்  கூறி வருகின்றனர்.