வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தேர்பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தேர்பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித ஆரோக்கிய மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது.இந்த பேராலயம் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படுகிறது.பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஐந்து கிறிஸ்தவ கோவில்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும்.

 

புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி முடிய 11 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆண்டு பேரு விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயம், மேல்கோவில், கீழ்கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

அதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன.

 

 

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்த நாளான இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியளவில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.