வேற வழியில்லை…….தொடர்ந்து 9வது மாதமாக அக்டோபரிலும் தயாரிப்பை குறைத்த மாருதி

 

வேற  வழியில்லை…….தொடர்ந்து 9வது மாதமாக அக்டோபரிலும் தயாரிப்பை குறைத்த மாருதி

விற்பனை நிலவரம் மோசமாக இருப்பதால், தொடர்ந்து 9வது மாதமாக கடந்த அக்டோபரிலும் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார் தயாரிப்பை குறைத்தது.

நம் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வாகன விற்பனை நிலவரம் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. குறிப்பாக கார் விற்பனை படுமோசமாக உள்ளது. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி இந்தியாவும் இதில் தப்பவில்லை. கார் விற்பனை மந்தகதியில் இருந்ததால் நிறுவனங்களின் கையிருப்பு அதிகரித்தது. தொடர்ந்து கையிருப்பு அதிகரித்து வருவதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார் தயாரிப்பை குறைத்தன.

மாருதி கார் தயாரிப்பு ஆலை

மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் கார் தயாரிப்பை கடந்த சில மாதங்களாக குறைத்து வருகிறது. தொடர்ந்து 9வது மாதமாக கடந்த அக்டோபரிலும் கார் தயாரிப்பை மாருதி நிறுவனம் குறைத்தது. கடந்த மாதத்தில் மாருதி நிறுவனம் மொத்தம் 1.19 லட்சம் கார்களை மட்டுமே தயாரித்தது. 2018 அக்டோபர் மாதத்தில் மாருதி நிறுவனம் 1.50 லட்சம் கார்களை தயாரித்து இருந்தது.

மாருதி கார்

ஏழு மாத தொடர் விற்பனை சரிவுக்கு பிறகு கடந்த அக்டோபரில்தான் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தது. அந்த மாதத்தில் அந்நிறுவனம் உள்நாட்டில் 1.44 லட்சம் கார்களை விற்பனை  செய்து இருந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் விற்பனை 4.5 சதவீதம் அதிகமாகும். 2018 அக்டோபரில் உள்நாட்டில் 1.38 லட்சம் கார்கள் மட்டுமே மாருதி நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.