வேகமாக பரவும் கொரோனா வைரஸ்……. காலவரையின்றி நாடாளுமன்றம் ஒத்திவைப்பா?….. தெளிவுப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா….

 

வேகமாக பரவும் கொரோனா வைரஸ்……. காலவரையின்றி நாடாளுமன்றம் ஒத்திவைப்பா?….. தெளிவுப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா….

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் இதுவரை இல்லை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 3ம் தேதியன்று தொடங்கியது. எதிர்பார்த்தது போலவே நாடாளுமன்றத்தில் வடகிழக்கு டெல்லி கலவரம் மற்றும் அமித் ஷா ராஜினாமா ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கிளப்பின. இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3ம் தேதி முடிவடையும் என்பதால் இன்னும் கொஞ்சம் நாட்களே அவைகள் நடைபெறும்.

மக்களவை சபாநாயகர்

இந்நிலையில், நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், நாடாளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் இதுவரை இல்லை என தெரிவித்தார்.

மக்களவை

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் அங்கு இதுவரை சுமார் 3,200 பேரை காவு வாங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது. 90 நாடுகளில் மொத்தம் 1.10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும்  நேற்று மாலை நிலவரப்படி 73 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.