வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

 

வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

கிங்ஸ் டவுன்: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், 2 டெஸ்டி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. அதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இதனிடையே, இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெறாத அந்த அணியின் நட்சத்திர வீரரும், ஆல்-ரவுண்டருமான டுவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, 40 டெஸ்ட் போட்டிகளிலும், 164 ஒருநாள் போட்டிகளிலும், 64 இருபது ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பிராவோ அறிமுகமானார். கடைசியாக 2014-ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக  சர்வதே ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதேபோல், 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து இன்று அறிவித்த பிராவோ, அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் தான் இன்றுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக தனது இடத்தை விட்டுச் செல்வதாக குறிப்பிட்ட பிராவோ, இந்தப் பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்,  உலகம் முழுவதும் நடைபெறும் பிற வகையான  20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.