வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: சாதனைகளை தகர்த்த விராட் கோலி சதம்

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: சாதனைகளை தகர்த்த விராட் கோலி சதம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் விளாசி பல சாதனைகளை முறியடித்துள்ளார்

ஆமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சதத்தை தொடர்ந்து, கேப்டன் விராட் கோலியும் சதம் விளாசி பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, கே.எல்.ராகுலையும் அறிமுக வீரர் பிருத்வி ஷாவையும் தொடக்க வீரர்களாக களமிறக்கியது. அறிமுக வீரர் பிருத்வி ஷா தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும், ரிஷாப் பான்ட் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தின் போது தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, சதமடித்தார். இது விராட் கோலியின் 24-வது டெஸ்ட் சதமாகும். இரண்டாம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 120 ரன்களுடனும், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

விராட் கோலி இன்று அடித்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் தகர்த்துள்ளார். இதுவரை டெஸ்ட் போட்டியில் அவர், 24 சதம் அடித்துள்ளார். கேப்டனாக அவருக்கு இது 17-வது சதமாகும். இந்த ஆண்டில் மட்டும் 4-வது சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், குறைந்த இன்னிங்ஸில் 24 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினை பின்னுக்கு தள்ளி விராட் கோலி இரண்டாமிடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பிராட்மேனும், மூன்றாவது இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் உள்ளனர். கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், கிரீம் ஸ்மித், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில விராட் கோழி உள்ளார்