வெளிமாநிலத்தவர்கள் மீது குஜராத்தில் தொடரும் தாக்குதல்; பாதுகாப்பு வழங்க உ.பி.,பீகார் முதல்வர்கள் வலியுறுத்தல்

 

வெளிமாநிலத்தவர்கள் மீது குஜராத்தில் தொடரும் தாக்குதல்; பாதுகாப்பு வழங்க உ.பி.,பீகார் முதல்வர்கள் வலியுறுத்தல்

குஜராத் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் மீது தொடரும் தாக்குதலையடுத்து, அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணியிடம் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் முதல்வர் பேசி தங்களது மாநில மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர்கள் மீது தொடரும் தாக்குதலையடுத்து, அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணியிடம் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் முதல்வர் பேசி தங்களது மாநில மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது சிறுமி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, குஜராத் மாநிலம் முழுவதும் வாடா மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில தொழிலாளர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். தொடர்ந்து, அம்மாநில தொழிலாளர்கள் அச்சம் காரணமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 50,000 தொழிலாளர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் 20,000 தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதனிடையே, வெளி மாநில இளைஞர்களை தாக்கியது தொடர்பாக இதுவரை 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 35 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபாணியிடம் தொலைபேசியில் பேசிய உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் முதல்வர்கள், குஜராத்தில் வசித்து வரும் தங்கள் மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், ஒரு சிலர் செய்த குற்றத்துக்காக ஒட்டுமொத்த வெளி மாநில மக்களையும் தண்டிக்க கூடாது. வெறுப்பு உணர்வை வளர்க்கவும் கூடாது என்றார்.

அதேபோல், குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா அளித்துள்ள பேட்டியில், குஜராத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது எங்களது கடமை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வன்முறை தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அச்சம் காரணமாக வெளிமாநிலத்திற்கு சென்ற இளைஞர்கள் குஜராத் திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.