வெளிநாட்டுக்கு விமானமேறும் இட்லி! நான்கு நாள்வரை கெடாத,ராமசேரி இட்லியின் ரகசியம்!

 

வெளிநாட்டுக்கு விமானமேறும் இட்லி! நான்கு நாள்வரை கெடாத,ராமசேரி இட்லியின் ரகசியம்!

இது கேரளத்து ஸ்பெஷல் இட்லி,ஆனால் ஆர்ஜின் தமிழகம்தான்.மொத்தமே ஆறு வீடுகளில் மட்டுமே தயாரிக்கிறார்கள்.தங்களது முன்னோர் தஞ்சையில் இருந்து இங்கே வந்து செட்டிலானவர்கள் என்கிறார்கள்.கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் பாதையில் முப்பதாவது கிலோமீட்டரில் பாறை என்கிற ஊரிலிருந்து பிரியும் கிளைச்சாலையில் சென்றால் ராமசேரி.

தஞ்சையிலிருந்து வந்த சித்தூரி அம்மாள் என்பவர்தான் ராமசேரி இட்லியை அறிமுகம் செய்தவர்.இப்போது வெளிநாட்டுக்குப் போகும் மலையாளிகள் இந்த ராமசேரி இட்லியை அங்கே இருக்கும் நன்பர்களுக்கு பார்சல் வாங்கிப்போய் கொடுக்கிறார்கள்.

idli

ஆனால்,சிந்தூரியம்மாள் நூறு வருடம் முன்பு இந்த இட்லிகளை கூடையில் எடுத்துப்போய் வயலில் வேலை பார்க்கும் பெண்களுக்கு விற்றிருக்கிறார்.ஒரு படி நெல் அல்லது பயறுக்கு இவ்வளவு நெல் என்ற கணக்கில்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள புளி,சின்ன வெங்காயம் சேர்த்த தேங்காய் சட்னி,காரச் சட்னியும் உருளை கிழங்கு ஸ்டூவும் தருகிறார்கள்.பார்சல் என்றால், இட்லிப் பொடிதான்.பொடியும் வழக்கமான பொடியாக இல்லாமல்,அரிசியும் மிளகும் சேர்த்து அரைத்திருக்கிறார்கள். அபாரமான சுவை.

idli

இப்போது சிந்தூரி அம்மாள் வழிவந்தவர்கள் இருபது குடும்பங்களுக்கு மேல் இருந்தாலும்,ஆறு குடும்பங்கள் மட்டுமே இட்லிகடை நடத்துகிறார்கள்.வார நாட்களில் 500 இட்லிகள்தான் விற்குமாம்,வார இறுதி நாட்களில் 1500 முதல் 2000 இட்லிவரை போகுமாம்.ஒரு இட்லியின் விலை இப்போது ஆறு ரூபாய்.காலை ஏழு மணி முதல் 11 மணிவரை வியாபாரம் களை கட்டுகிறது.

கோவை பாலக்காடு நகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இந்த ஊர் சமையல் கலைஞர்கள் வாரத்தில் ஒரு நாள் சிறப்பு உணவாக இதைத் தயாரித்து வழங்குகிறார்கள்.நான்கு நாட்கள் வரை கெடாது என்பதால்,துபாயிலிருக்கும் நட்சத்திர உணவகங்களில் இருந்தும் அவ்வப்போது ஆர்டர்கள் வருகின்றன.

தற்போது ராமசேரி இட்லி தயாரிக்கும் ஆறு குடும்பங்களில் பாக்கியலட்சுமி அம்மாள்தான் சூப்பர் ஸ்டார். ஆனால் பெரிய ஆர்டர்கள் வரும்போது ஆறு குடும்பத்தினரும் வேலையையும் லாபத்தையும் பகிர்ந்து கொள்கின்றன.

bagya

ரகசியம் என்ன? அப்படி ஒன்றும் ரகசியமில்லை என்பதுதான் ரகசியமே.நம் வீடுகளில் செய்யும் அதே ரெசிப்பிதான்.உளுந்தையும் அரிசியையும் தனிதனியே ஊறவைத்து அரைத்து கலந்துதான் இங்கேயும் இட்லி செய்கிறார்கள்.ஒரு வேளை அதன் உருவ அமைப்பு காரணமாகலாம்.ஒரு பெரிய ஆப்பத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், அதன் நடுவில் இருக்கும் உப்பலான பகுதியை மட்டும் வெட்டி எடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் ராமசேரி இட்லி.
அதைத்தயாரிக்கும் பாத்திரம் நம்ம ஊர் இட்லிப் பானைகளைப் போல இல்லை.ஒரு வாயகன்ற பாத்திரம்,அதன் மேல் 6 இஞ்ச் விட்டமுள்ள தட்டுகளில் நனைத்த துணியை போட்டு அதில் ஊத்தப்பம் போல மாவு ஊற்றப்படுகிறது.இதுபோன்ற நான்கு தட்டுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மூடிபோட்டு அவிக்கப் படுகின்றன.ஒருவர் ஒரு மணி நேரதில் 100 இட்லி தயாரிக்கலாமாம்.

kj

ஆரம்ப காலத்தில் இதற்கு மண்பாண்டங்களும் மூங்கில் தட்டுகளும்தான் பயன்படுத்த பட்டிருக்கின்றன.இப்போது தேவை அதிகரித்து விட்டதால் அலுமினிய பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.முன்பெல்லாம் இவர்களின் இட்லி ஒரு வாரம் வரை கெடாதாம்!இப்போது விவசாயிகள் நிறைய மருந்துகளை பயன்படுத்துவதனால் மூன்று நாட்கள் வரை கெடுவதில்லை என்கிறார்கள். 

இவர்களின் தயாரிப்பான இட்லிப் பொடியோ இரண்டு வருடம் கெடாது என்க்கிறார்கள்.கோவை பாலக்காடு சாலையில் இருந்து பிரியும் கிளைச்சாலை சிங்கிள் ரோடுதான்.ஆனாலும் அந்த வழி போகும்போது ராமசேரி பாக்கியலட்சுமி அம்மாள் கடைக்கு ஒரு விசிட் அடியுங்கள்.

சிரிய இடம்தான்,பத்து பதினைந்து பேர்தான் உட்கார முடியும் என்பதால் கொஞ்சம் காத்திருக்க வேண்டி இருக்கலாம்.ஆனால்,ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டதும் காத்திருந்தது தவறல்ல என்று ஒப்புகொள்ளும் உங்கள் நாக்கு.அப்படியே மறக்காமல் இட்லிபொடி கொஞ்சம் வாங்கிக்கொண்டு வாருங்கள் நம்ம ஊர் இட்லிக்கும் அது பொருத்தமான ஜோடிதான்.