வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கம்; மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி

 

வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கம்; மக்கள் முடிவை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி

ஐந்து மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

டெல்லி: ஐந்து மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், தெலங்கானா மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வெற்றி பெட்டரு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக-விடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்திலும் பாஜக-வை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஐந்து மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.