வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள்

 

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள்

: பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் உதவியுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த இந்தியாவின் அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் உதவியுடன் விண்ணில் சீறிப்பாய்ந்த இந்தியாவின் அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு, கடல்வழி, பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் வாயிலாக, செயற்கைக்கோள்களை, இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, தற்போது புவி ஆய்விற்காக, அதிநவீன, ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

மொத்தம் 380 கிலோ எடைகொண்ட ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைகோள், வேளாண்மை, வனம், கடலோர பகுதி, நீர் நிலைகள், மண்வளம் உள்ளிட்ட புவி ஆய்விற்கு பயன்படுத்தப்பட உள்ளது

அந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 44.4 மீட்டர் உயரம் கொண்ட பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் உதவியுடன் இன்று காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஹைசிஸ் செயற்கைக்கோளுடன், எட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறு மற்றும் நானோ செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டன.

இஸ்ரோ தயாரித்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் (HysIS) செயற்கைகோளை புவி வட்டப்பாதையில் 630 கிலோ மீட்டர் தொலைவிலும், மற்ற 30 செயற்கைகோள்களை 504 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி, இந்தியாவின் அதிநவீன ‘ஹைசிஸ்’ செயற்கைக்கோள் உள்பட பிஎஸ்எல்வி-சி43 ராக்கெட் சுமந்து சென்ற அத்தனை செயற்கைக்கோள்களும் அதனுடைய நியமிக்கப்பட்ட சுற்று வட்டப்பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டன.