வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை… மத்திய அரசு எச்சரிக்கை….

 

வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை… மத்திய அரசு எச்சரிக்கை….

வெங்காயத்தை பதுக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய சப்ளை பாதிக்கப்படும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. சப்ளை பாதித்தால் வெங்காயத்தின் விலை மளமளவென ஏற்றம் கண்டு விடும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மனிதர்கள்தான். எனவே மத்திய அரசு வெங்காய சப்ளையை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

வெங்காய மண்டி

நுகர்வோர் விவகார துறையின் செயலர் அவினாஷ் கே ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வெங்காயத்தின் விலை நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்தனர். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், பொருத்தமான தலையீடுகள் வாயிலாக, விலை நிலவரத்தை நுகர்வோர் விவகாரங்கள் துறை தொடர்ந்து கண்காணிக்கும். 

வெங்காய சந்தை

வெங்காயத்தை பதுக்குபவர்கள் மற்றும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்யும். வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.