வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்த இளைஞர்…யூடியூப் பார்த்து செய்தாராம்!

 

வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்த இளைஞர்…யூடியூப் பார்த்து செய்தாராம்!

வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: வீட்டிலேயே கேரட் பீர் தயாரித்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவியதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் கடை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் அத்தியாவசிய தேவை இல்லை என்பதால் அவை இந்த ஊரடங்கு காலத்தில் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இது குடிமகன்களை பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமும் குடித்துப் பழகியவர்களுக்கு தற்போது இந்த சூழ்நிலையை கடப்பது பெரும் சவாலாக உள்ளது. அதனால் கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்களை நோக்கி குடிமகன்கள் செல்கின்றனர். குவார்ட்டர் ரூ.1000 என்றாலும் அதையும் வாங்கி குடிக்கவே அவர்கள் தயாராக உள்ளனர். மேலும் சிலர் ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்பட்ட சானிடைசர், வார்னிஷ், ஷேவிங் க்ரீம் போன்றவற்றை கலந்து குடித்து இறந்துள்ளனர். இன்னும் சிலர் ஆன்லைனில் பார்த்து தாங்களாகவே சுயமாக மது தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு முயற்சி செய்த சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த வகையில் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேரட் பீர் தயாரித்து விற்பனை செய்த சுகுமார் என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். யூடியூப் பார்த்து அவர் கேரட் பீரை காய்ச்சியது விசாரணையில் தெரியவந்தது. மதுபானம் தயாரிப்பது மாதிரி வாசனை வந்ததால் சுகுமாரின் வீட்டுக்கு அருகில் வசித்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.