வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு; வீடுகள் விலை குறைய வாய்ப்பு

 

வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிப்பு; வீடுகள் விலை குறைய வாய்ப்பு

வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதால் வீடுகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை: வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதால் வீடுகளின் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை போன்ற நகரங்களில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, எப்.எஸ்.ஐ (Floor Space Index) எனப்படும் அல்லது தள பரப்பு குறியீடு எனப்படும் கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில் மாடிகளுக்கு மிகாத கட்டடங்களுக்கு தள பரப்பளவு குறியீடு 1.5 மடங்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மனை பரப்பை விட, ஒன்றரை மடங்கு பரப்பளவுக்கு கட்டடங்களை அதில் கட்டிக் கொள்ளலாம்.

இந்நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, வீடுகளுக்கு இலவசமாக அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1 .5-லிருந்து 2-ஆக மாற்றியமைக்கப்படும் எனவும், இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.

இந்த மாற்றத்தின் மூலம் புதிய நிலத்தை வாங்காமலேயே பழைய மனையில் அதிக கட்டடங்களை கட்ட முடியும். அதாவது, 1000 சதுரடி  மனைப்பரப்பில் 2000 சதுர அடி பரப்புக்கு வீடுகளை கட்டலாம். இதனால், செலவுகள் குறைந்து வீடுகளின் விலையும் குறையும் சூழல் உருவாகியுள்ளது. சென்னையில் இனி வழக்கத்தை விட உயரமான கட்டடங்களை கட்ட முடியும் என்பதால், நிலத்திற்கு செலவிடப்படும் பெரும் தொகை குறையும். எனவே, கட்டுமான நிறுவனத்தினர் வீடுகளை குறைந்த வலைக்கு விற்க வாய்ப்புள்ளது.