வீடியோகான் நிறுவனத்தின் கடன் வழக்கு எதிரொலி: சந்தா கோச்சார் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை!

 

வீடியோகான் நிறுவனத்தின் கடன் வழக்கு எதிரொலி: சந்தா கோச்சார் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை!

வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன்  வழக்கில் சிக்கியுள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூட் ஆகியோரது  இல்லங்களில் அமலாக்கத் துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

மும்பை: வீடியோகான் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன்  வழக்கில் சிக்கியுள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூட் ஆகியோரது  இல்லங்களில் அமலாக்கத் துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராகச் சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோ கான் குழுமத்திற்கு, சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கியுள்ளார். வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய கொஞ்ச நாட்களில், கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சி.பி.ஐ.  இந்த வழக்கு தொடர்பாக சந்தா கோச்சருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பித்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்காக, விமான நிலையங்களுக்கு அனுப்படுவதுதான் லுக்-அவுட் நோட்டீஸ். இந்த லுக் அவுட் நோட்டீஸானது சந்தா கோச்சரை அடுத்து வேணுகோபாலுக்கும் அனுப்ப சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.  

இந்நிலையில், மும்பையில் உள்ள, சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்தா கோச்சர், ‘நான் ஐசிஐசிஐ வங்கியில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். நிறுவனத்தின் நலனுக்காக மிகவும் கடுமையாக உழைத்தேன். நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே நான் பதவியிலிருந்த போது உழைத்தேன்’ என்றார்.